
நாம் முன்னெடுக்கும் பாதைகள் செயற்திட்டம் யாழ்ப்பாணத்துக்கு வருகிறது
நாம் முன்னெடுக்கும் பாதைகள் (TRWT) திட்டம் Yarl IT Hub’ இன் YGC புத்தாக்கத் திருவிழாவில் உள்ளடங்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC) ஸ்ரீ லங்கா, தேசிய கலாசார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஐரோப்பிய வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடான நாம் முன்னெடுக்கும் பாதை செயற்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகள் மற்றும் ஒன்றியத்துடன் இணைந்துள்ள நாடுகளும், Good Life X உடன் இணைந்து, 2025 ஆகஸ்ட் 29-30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் YGC புத்தாக்கத் திருவிழாவில் பங்கேற்கவுள்ளன.
முதற்கட்டம் கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் 13 புத்தாக்க வெளிப்பாடுகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன நிலைபேறான மற்றும் சுழற்சி கொள்கைகளை வெளிப்படுத்தியிருந்தன. இந்நிலையில் இந்தத் திட்டம் தற்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. பிராந்திய நிகழ்ச்சி முகாமையாளரான ஓலையின் ஸ்தாபகர் யதுஷா குலேந்திரனுடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மையின் அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கும். ஓலையினால் உறுதியான, சூழலுக்கு நட்பான மற்றும் உக்கக்கூடிய பனை தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. வட இலங்கையைச் சேர்ந்த பனைத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் திறன் படைத்த பெண்களுக்கு வலுவூட்டும் வகையில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. Yarl IT Hub இன் WEHub எனும், பிராந்தியத்தின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் கட்டமைப்பின் ஒழுங்கிணைப்பாளராகவும் யதுஷா செயலாற்றுகிறார்.
ஒன்றிணைந்து, புத்தாக்கம், சிந்தனை மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைந்திருக்கும் YGC புத்தாக்கத் திருவிழாவில், நாம் முன்னெடுக்கும் பாதைகள் புத்தாக்க சமூக பங்காளராக இணையும். இந்த நிகழ்வில், செயற்திட்டத்தினால் நிலைபேறான புத்தாக்கப் பணிகள், ஈடுபாட்டுச் செயற்பாடுகள் மற்றும் திறன் கட்டியெழுப்பும் பயிற்சிப் பட்டறைகள் போன்றன முன்னெடுக்கப்படும். பரந்தளவான பார்வையாளர்களுடன் புத்தாக்க பசுமைச் செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வதற்கும், புத்தாக்க தொழிற்துறைகளினுள் நிலைபேறான புத்தாக்கங்களுக்கு எதிர்காலத்தில் கைகோர்ப்புகளை ஏற்படுத்துவதற்கு வழியேற்படுத்தும் வலையமைப்பை விரிவாக்கம் செய்வதற்கும் இந்த ஈடுபாடுகள் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
YGC புத்தாக்கத் திருவிழாவில் நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டத்தின் ஈடுபாடு தொடர்பில் பிராந்திய செயற்திட்ட முகாமையாளர் யதுஷா குலேந்திரன் கருத்தத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் YGC புத்தாக்கத் திருவிழாவில் நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டத்தின் பிரசன்னம் என்பது, புத்தாக்க சூழல்கட்டமைப்பின் உள்ளக அம்சமாக பசுமை புத்தாக்கங்களை மேலும் நிறுவுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். இந்த இரு துறைகளும் எவ்வாறு கைகோர்த்து, ஒருவருக்கொருவர் ஊக்குவித்து, வலிமையான மற்றும் இணைக்கப்பட்ட எதிர்காலத்தை கட்டியெழுப்பலாம் என்பது பற்றி அறிந்து கொள்ள நாம் ஆவலாக உள்ளோம்.” என்றார்.