தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் ஊடகவியலாளர் ஒருவரும், ஒரு அமைப்பும் தாக்கல் செய்துள்ளதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மனுவில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், சபாநாயகர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவி சுமார் ஆறு மாதங்களாக காலியாக இருப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான உபாலி அபேரத்னவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த வெற்றிடம் ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தாலும், காலியாக உள்ள இடத்தை நிரப்ப ஒரு பதில் தலைவரை கூட நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதன்படி, தகவல் கோரிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகளை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், குறித்த ஆணைக்குழுவின் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )