
தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான Ather Energy, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அடுத்த தலைமுறை மின்சார ஸ்கூட்டரான Ather Rizta இனை இலங்கை மோட்டார் வாகன (Sri Lanka Motor Show) கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய தருணத்திற்கு தயாராகியுள்ளது. Ather ஆனது ஆழமான உள்ளகப் பொறியியலின் ஆதரவுடன் உயர் செயல்திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஸ்கூட்டர்களை உருவாக்குவதில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த அறிமுகமாளது, இலங்கையில் Ather இன் இரண்டாவது தயாரிப்பு வெளியீட்டை குறிக்கிறது. அத்துடன், மேம்பட்ட, நம்பகமான மற்றும் தொடர்பாடல் இணைப்பைக் கொண்ட மின்சாரப் போக்குவரத்தை இலங்கை மோட்டார் சைக்கிள் பயன்பாட்டாளர்களுக்கு வழங்குவதில் இது ஒரு முக்கிய படியாகும்.
நவீன, தொழில்நுட்ப ரீதியாக முன்னோக்கிய சிந்தனை கொண்ட போக்குவரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Rizta ஸ்கூட்டர், ஸ்மார்ட் பொறியியலை நடைமுறைத் தன்மையுடனும் கவர்ச்சியான தோற்றத்துடனும் ஒன்றிணைக்கிறது. அதன் விசாலமான வடிவமைப்பு, நேர்த்தியான ஸ்டைலிங் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றுடன், Rizta ஆனது Ather இன் மேம்பட்ட தொழில்நுட்பத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு மிருதுவான மற்றும் நம்பிக்கையான வாகன செலுத்தல் அனுபவத்தை வழங்குகிறது. இது புத்தாக்கம், வசதி மற்றும் தமது வாழ்க்கைத் தரத்துடன் பொருந்தக்கூடிய நவீன அழகியலுக்கு முக்கியத்துவம் வழங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 699,900 எனும் விலையில் ஆரம்பமாகும் இது, Rizta S மற்றும் Rizta Z மாதிரிகளாக நாட்டின் சந்தையில் வெளியிடப்படுகின்றது. அறிமுகத்தின் போது Rizta S இற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதோடு, Rizta Z இற்கான முன்பதிவுகள் அதனைத் தொடர்ந்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது குறித்து, Ather இன் உத்தியோகபூர்வ பங்காளியான Evolution Auto குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா தெரிவிக்கையில், “நாம் ஒரு புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதோடு மாத்திரமல்லாது, இலங்கையில் மின்சார இருசக்கர வாகன போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை ஏற்படுத்துகிறோம். Ather Rizta ஆனது, நோக்கத்துடன் கூடியப் புத்தாக்கத்தை கொண்டுள்ளது. இது மின்சாரப் பயணத்தை நடைமுறை ரீதியாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் வழங்குகிறது.” என்றார்.
இவ்வர்த்தக நாமத்தின் கொள்கையை மீள வலியுறுத்திய Evolution Auto (Pvt) Ltd. நிறுவனத்தின் 2W/3W வணிகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸஹ்ரான் ஸியாவூதீன், “நவீன இலங்கை பயணிக்கு அர்ப்பணிப்பக்கப்பட்ட ஒரு வாகனமாக Ather Rizta விளங்குகின்றது. அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திலிருந்து அதன் விசாலமான வடிவமைப்பு வரை ஒவ்வொரு அம்சமும் பயணிப்பதற்கு ஒரு சிறந்த மற்றும் மிகவும் பொறுப்பான வழியைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதானி சௌரப் சர்மா, “Ather இன் பிரதமானமாக கவனம் செலுத்தப்பட்ட பொறியியல், மேம்பட்ட தொடர்பாடல் இணைப்பைக் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் நிஜ உலக பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நீடித்து உழைக்கும் தன்மையுடன் கூடிய Rizta ஸ்கூட்டரானது, இதே பிரிவில் உள்ள வாகனங்களுக்கு மத்தியில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் வலுவான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதன் மேம்பட்ட அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் ஆகியன இலங்கையின் பயண ஆர்வலர்களுக்கு சிறப்பாகப் பொருந்துமென நாம் நம்புகிறோம்.” என்றார்.
Rizta மணித்தியாலத்திற்கு 80 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறனைக் கொண்டுள்ளதோடு, வெறுமனே 4.7 செக்கன்களில் 0 இலிருந்து 40 கி.மீ/மணித்தியால ஆர்முடுகலை அடைய உதவுகிறது. இது 2.7kWh லிதியம்-அயன் மின்கலத்தை கொண்டுள்ளது. இதன் இரண்டு மாதிரிகளிலும், சிறந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், 123 கி.மீ எனும் சான்றளிக்கப்பட்ட IDC எல்லையை வழங்குகிறது. தொழில்நுட்பத்தை முதன்மைப்படுத்தும் Ather இன் DNA இற்கு ஏற்ற வகையில், Rizta Z ஆனது உடனடி திரை வழிகாட்டலுக்கான Google Maps மற்றும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஏனைய செய்திகளை காண்பிக்கும் Bluetooth இணைப்புடன் கூடிய, 7 அங்குல TFT தொடுதிரை உடனான டேஷ்போர்டை கொண்டுள்ளது. அத்துடன், சவாரி செய்வோர் சரிவுகளில் ஸ்கூட்டரை நிலையாக வைத்திருக்கும் வகையில் AutoHold, குறுகிய இடங்களில் எளிதாகச் செயல்படுவதற்கான Reverse Mode, ஈரமான அல்லது சமனற்ற தரைகளில் மேம்படுத்தப்பட்ட பிடிப்புக்கான SkidControl மற்றும் மிருதுவான சவாரிக்கான Monoshock சஸ்பென்ஷன் போன்ற அறிவார்ந்த கருவிகள் மற்றும் வசதிகளையும் இது கொண்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பங்கள், இலங்கையர்களுக்கும் அன்றாட வசதி, மேம்பட்ட பாதுகாப்பு, நெருக்கமான நகரப் போக்குவரத்தில் சிரமமற்ற பயன்பாடு ஆகியவற்றை வழங்கும் வகையில் மீளமைக்கப்பட்டுள்ளன.
செயல்திறன் மற்றும் ஏனைய வசதிகளுக்கு அப்பால், பாதுகாப்பு மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மை தொடர்பில் Ather கொண்டுள்ள கவனமானது, Rizta வின் மையத்தில் காணலாம். நிறுவனத்தின் உள்ளக பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட மின்கலங்கள், நிஜ உலக நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தாக்கம், அதிர்வு மற்றும் அதிக வெப்பநிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், 272 கடுமையான சோதனைகளுக்கு அவை உட்படுத்தப்படுகின்றன. இந்த மின்கல பொதியானது, IPX7 வகை நீர் புகாதது என்பதுடன், AIS-156 சான்றிதழ் பெற்றதாகும். இவை தொழில்துறையின் முன்னணி பாதுகாப்புத் தரங்களை பிரதிபலிக்கிறது. Ather தனக்கே உரிய Ather தயாரிப்பு மேம்பாட்டு கட்டமைப்பையும் (Ather Product Development System – APDS) பின்பற்றுகிறது. இது எந்தவொரு தயாரிப்பும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் எட்டு நிலைகளைக் கொண்ட தர மீளாய்வுகளை கட்டாயமாக்குகிறது. அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பொறியியல் விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டும் வகையில், 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, அதன் ஸ்கூட்டர்களின் அனைத்துக் கூறுகளையும் சரிபார்க்க நிறுவனம் 4,535 தனித்துவமான சோதனைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ather தமது அனைத்து ஸ்கூட்டர்களுக்கும் 5 வருடங்கள் அல்லது 60,000 கி.மீ (முதலில் வருவதன் அடிப்படையில்) மின்கல உத்தரவாதத்தை வழங்குகிறது. அத்துடன், மேலதிகமான கொள்வனவாக 8 வருடங்கள் அல்லது 80,000 கி.மீ. (முதலில் வருவதன் அடிப்படையில்) வரை மேம்படுத்துவதற்கான தெரிவும் வழங்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியின் முடிவில் குறைந்தபட்சம் 70% மின்கல ஆரோக்கியத்தையும் அது உறுதி அளிக்கிறது. இந்த நீண்ட கால உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், நம்பகமான, நீண்ட காலம் நீடிக்கும் தயாரிப்புகளை வழங்குவதற்கான Ather இன் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. மேலும், மின்சார வாகன போக்குவரத்து குறித்த நிறுவனத்தின் அணுகுமுறையானது, நீண்ட கால மதிப்பை வழங்குதல் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பெற்றோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்கள் குறைந்த பயணச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகளை கொண்டுள்ளன. காலப்போக்கில் இது அவற்றை மேலும் சிக்கனமானதாக ஆக்குகிறது.
2024 டிசம்பரில் Ather 450X உடன் இலங்கையில் நுழைந்த Ather, 40 அனுப மையங்கள் மற்றும் 5 Ather Grid வேகமான சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் நாட்டில் நம்பிக்கை மற்றும் ஆதரவின் ஒரு வலுவான அடித்தளத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. Ather Rizta மின்சார ஸ்கூட்டர் மூலம், இந்த உறவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல நிறுவனம் முயற்சிக்கிறது. நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் முன்னணி புத்தாக்கத்தின் ஆதரவுடன் இலங்கை மோட்டார்சைக்கிள் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு சிறந்த, நம்பகமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர்களை நிறுவனம் வழங்குகிறது.
Ather Energy Limited பற்றி
Ather Energy Limited (ATHERENERG | 544397 | INE0LEZ01016) இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன (“E2W”) சந்தையில் முன்னோடியான நிறுவனம் ஆகும் (CRISIL அறிக்கை). 2013 இல் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்ட Ather நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களை வடிவமைத்து உற்பத்தி செய்கின்றது. இது 2018 இல் தனது முதலாவது மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. தற்போது Ather இன் E2W தயாரிப்பு வரிசை, இரண்டு தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. அவை செயல்திறனை முன்னிலைப்படுத்தும் Ather 450 தொடர் மற்றும், 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வசதியை முன்னிலைப்படுத்தும் குடும்பத்திற்கு ஏற்ற Ather Rizta தொடர் ஆகியனவாகும். இந்த இரண்டு தொடர்களும் மொத்தமாக 9 மாதிரிகளாக கிடைக்கின்றன. இந்தியாவில் பிரத்தியேகமான விரைவான சார்ஜிங் வலையமைப்பை உருவாக்கிய முதலாவது இருசக்கர வாகன உற்பத்தியாளர் (OEM) Ather ஆகும். “Ather Grid” என அழைக்கப்படு இந்த வலையமைப்பு, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். Ather இன்று இந்தியாவில் மிகப்பெரும் இருசக்கர மின்சார வாகன சார்ஜிங் வலையமைப்பை இயக்குகிறது. 2025 செப்டெம்பர் 30 வரையிலான காலத்திற்குள் உலகளாவிய ரீதியில் 4,322 வேகமான சார்ஜர்கள் மற்றும் அருகாமை சார்ஜர்களை Ather நிறுவியுள்ளது. இதில் 4,282 இந்தியாவிலும், 33 நேபாளம் மற்றும் இலங்கையிலும் உள்ளன. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் Ather, 2025 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை 319 பதிவு செய்யப்பட்ட வர்த்தகநாமங்களையும், 212 பதிவு செய்யப்பட்ட வடிவமைப்புகளையும், 48 பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளையும் கொண்டுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் 120 வர்த்தகநாமங்கள், 108 வடிவமைப்புகள் மற்றும் 492 காப்புரிமைகளுக்கான நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் கொண்டுள்ளன.
